ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வங்கதேச அணி ஐக்கிய அரபு அமீரகத்தை 195 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
10வது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வங்கதேசம் மற்றும் இயக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி அட்டகாசமாக விளையாடி 129 ரன்களை குவித்தார்.
அவர் 12 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 149 பந்துகளில் இந்த ஸ்கோரை எடுத்தார். அதேபோல் வங்கதேச அணியின் மற்ற வீரர்களில் சவுத்ரி முகமது ரிஸ்வான் 60 ரன்களும், அரிஃபுல் இஸ்லாம் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்களில் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்களை குவித்தது.
யூஏஇ அணியில் அதிகபட்சமாக அய்மன் அகமது 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஓமித் ரஹ்மான் 2 விக்கெட்களும், ஹர்திக் பாய் மற்றும் துருவ் பராசரர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐக்கிய அரபு அமீரகம் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஆர்யன்ஷ் சர்மா 9 ரன்களிலும் மற்றொரு தொடங்க வீரரான அக்ஷத் ராய் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்த அணியில் அதிகபட்சமாக துருவ் பராசரர் 25 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஐக்கிய அரபு அமீரகம் அணி 25 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேசத்தில் அதிகபட்சமாக ரோஹனத் டவுல்லா போர்சன் மற்றும் மருஃப் மிருதா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இக்பால் ஹசன் எமன் மற்றும் பர்வேஸ் ரஹ்மான் ஜிபோன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் வங்கதேச அணி 195 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை வென்றது.
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது 129 ரன்களை அடித்த வங்கதேச அணியின் வீரர் அஷிகுர் ரஹ்மான் ஷிப்லிக்கு கொடுக்கப்பட்டது. அதேபோல் இந்த தொடரின் தொடர் நாயகன் விருதும் அஷிகுர் ரஹ்மான் ஷிப்லிக்கே வழங்கப்பட்டது.