இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தொடரில் இருந்து விலகுவதாக இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகா பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டர்.
தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ-யிடம் கூறி இருக்கிறார். இஷான் கிஷன் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், தனிப்பட்ட காரணங்களால் இஷான் கிஷன் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
இஷான் கிஷன் 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பே பல முறை டி20 மற்றும் ஒருநாள் அணியில் அவ்வப்போது இடம் பெற்று சிறப்பாக ஆடி இருந்தார். ஆனாலும், 2023 உலகக்கோப்பை தொடரில் அவர் மாற்று வீரராக இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.
உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் நடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடிய அவர் அதன் பின் ஓய்வு அளிக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழி விட்டார். அதன் பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவருக்கு ஆடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இருந்து இஷான் கிஷன் விலகி இருக்கிறார். டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராகவே இஷான் கிஷன் சேர்க்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.