கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு எதிராக பேனர் மற்றும் போஸ்டர் வைத்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், இது அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்று ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.
கேரளாவில் மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ., ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறது.
மேலும், ஆளுநரை எந்தப் பல்கலைக்கழகத்திலும் வேந்தராக நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று எஸ்.எப்.ஐ. அமைப்பினர் கூறி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சிக்காகச் சென்ற ஆளுநரின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் தன்னை தாக்க சதி செய்வதாகவும், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், முதல்வர் நிகழ்ச்சியில் இதுபோன்று போராட்டக்காரர்கள் அனுமதிக்கப்படுவார்களா? முதல்வரின் கார் அருகே யாரேனும் வர இயலுமா? அதற்கு காவல்துறை அனுமதிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள காலிகட் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்ற ஆளுநர் ஆரிஃப் முகமது கான், அங்கிருக்கும் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.
அப்போது, விருந்தினர் மாளிகையின் நுழைவு வாயிலில் ஆளுநர் வெளியேறும்படி வலியுறுத்தி “சான்சிலர் கோ பேக்” என்று கறுப்பு நிறத்தில் பேனர்கள் கட்டப்பட்டிருந்தது. மேலும், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. இதைக்கண்ட ஆளுநர் கடும் ஆத்திரமடைந்தார்.
இதையடுத்து, பேனர்களை வைக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும், இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் விளக்கம் கேட்குமாறு தனது செயலருக்கு உத்தரவிட்டார்.
பின்னர், இதுகுறித்துப் பேசிய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், “இது மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம். நேற்றே பேனர் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை தடுக்கவும், அகற்றுவதற்காகவும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் இங்கு தங்கியிருந்தால் இவ்வளவு போலீஸார் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில பேனர் வைத்திருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.