நெல்லையில் வரலாறு காணாத வெள்ளத்தால், கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தண்ணீரில் மூழ்கிவிட்டது.
ஆற்றங்கரையோரம் உள்ள நெல்லை சந்திப்பு, பேருந்து நிலையம், சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரத்தில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளத்தில் இருந்து வீடுகளின் மொட்டை மாடிகளில் பலரும் தஞ்சமடைந்துள்ளனர். திருநெல்வேலியில் பெரும்பாலான வீடுகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
இந்த நிலையில், உடையார்பட்டியில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில், சிவா என்பவரும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு, உயிருக்குப் போராடினார். இதைப் பார்த்த அவரது மகனும, மகளும் போராடி அவரைக் காப்பாற்றினர். ஆனால், அவர் மிகுந்த ஆபத்தான கட்டத்தில் உயிருக்கு போராடினார்.
இதனையடுத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அவர் இறந்துவிட்டார். தனது தாய் திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வரும் நிலையில், உறவினர் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளதால், இறந்துபோன தந்தையின் உடலை எங்கு கொண்டு செல்வது என தெரியாமல் தவிக்கின்றனர் இளம் பிஞ்சுகள்.