மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட 45 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட கனிமொழி, மாணிக்கம் தாகூர், நடராஜன், வெங்கடேசன், பெனி பெகன், முகமது ஜாவேத், ஸ்ரீகண்டன், ஓ பிரையன் உட்பட 14 எம்.பிக்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை பலமுறை மக்களவை தலைவர் எச்சரித்தார். ஆனால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதேபோல் மாநிலங்களவையில், அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்த காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், மற்றும் என்விஎன் சோமு, என்.ஆர்.இளங்கோ உள்பட 45 எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.