நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வந்த நிலையில், கடந்த 13-ம் தேதி மதியம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் திடீரென மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்தனர்.
தொடர்ந்து, கோஷமிட்டபடியே சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடிய இருவரையும் எம்.பி.க்கள் பிடிக்க முயன்றனர். அப்போது, தாங்கள் மறைத்து வைத்திருந்த கலர் புகைக் குண்டுகளை மக்களவையில் வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும், இருவரையும் எம்.பி.க்கள் பிடித்து அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல, இச்சம்பவம் நடந்த அதேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த இருவரையும் பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். 4 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்திருக்கும் நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கக் கோரி, எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே, கடந்த 16-ம் தேதி தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க. எம்.பி. கனிமொழி உட்பட மக்களவையில் இருந்து 13 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் இருந்து 1 எம்.பி.யும் என மொத்தம் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் 18-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல கூடின. ஆனால், அப்போதும் எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர், அவை மீண்டும் கூடியபோதும், எதிர்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஆகவே, மக்களவையில் 33 பேர், மாநிலங்களவையில் 45 பேர் என மொத்தம் 78 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் தொடர் அமளி குறித்தும், 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்தும் விவாதிப்பதற்காக பா.ஜ.க. நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று கூட்டி இருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இக்கூட்டம் நடந்து வருகிறது.
இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.