எதிர்கட்சிக் கூட்டணியின் நோக்கம் நமது ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், பா.ஜ.க.வின் நோக்கம் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடந்த 13-ம் தேதி பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் மக்களவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் மற்றும் எதிர்கட்சிகளின் அமளி குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி தலைமையில் புதுடெல்லியில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து விவரித்தார்.
அப்போது, “ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் பாதுகாப்பு மீறலை கண்டித்திருக்க வேண்டும். விதிமீறலைப் போன்றே ஆபத்தான இச்செயலுக்கு சில கட்சிகள் ஆதரவளிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் எதிர்கட்சிகள் திணறுகின்றன. இதன் காரணமாகவே, நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்துகிறார்கள்.
எதிர்கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகளால், எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களது எம்.பி.க்களை எண்ணிக்கை குறைவதை உறுதி செய்யும். அதேசமயம், பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
எதிர்கட்சிகளைப் பொறுத்தவரை, நமது ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், பா.ஜ.க.வின் நோக்கம் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதுதான். ஆகவே, நாட்டின் வளர்ச்சிக்காக பா.ஜ.க. பாடுபடும் என்று பிரதமர் மோடி கூறினார்” என்று கூறினார்.