மக்களவையில் அமளியில் ஈடுபட்ட கார்த்தி சிதம்பரம், திருமாவளவன், பரூக் அப்துல்லா உள்ளிட்ட 49 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் ,இதனையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 13-ம் தேதி மக்களவையில், பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி அமளியில் ஈடுபட்ட கனிமொழி, மாணிக்கம் தாகூர், நடராஜன், வெங்கடேசன், பெனி பெகன், முகமது ஜாவேத், ஸ்ரீகண்டன், ஓ பிரையன் உட்பட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட 33 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதேபோல் மாநிலங்களவையில் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், மற்றும் என்விஎன் சோமு, என்.ஆர்.இளங்கோ உள்பட 45 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மக்களவை இன்று கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட தொடங்கினர். இதனையடுத்து கார்த்தி சிதம்பரம், திருமாவளவன், பரூக் அப்துல்லா உள்ளிட்ட 49 எம்.பி.,க்களை மக்களவை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே 92 எம்.பி.,க்கள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். இதனால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்களின் மொத்த எண்ணிக்கை, 141 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.