கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், பல்வேறு விளையாட்டுத் துறைகளில் 1,341 திறமையான பெண் வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வந்த நிலையில், பாதுகாப்பு மீறல் காரணமாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த 15-ம் தேதிக்குப் பிறகு 18-ம் தேதிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர், 18-ம் தேதி இரு அவைகளும் மீண்டும் கூடிய நிலையில், எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், அமளிக்கு மத்தியிலும் மானிக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் பல பெண்கள் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 479 பெண்களுக்கு குறிப்பிட்ட போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 19 வெவ்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் 52,000 பேர் பங்கேற்றனர். கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் பெண் விளையாட்டு வீரர்களுக்காக ‘பெண்களுக்கான விளையாட்டு’ என்ற துணைக் கூறு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் தற்போது வரை 1,341 திறமையான பெண் வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெண்களின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘அஸ்மிதா’ என்ற சிறப்பு இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.
2020 – 21 முதல் 2023 – 24 வரையிலான காலகட்டத்தில் 7,676 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.