பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, தேரா காஜிகான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் நாடு ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமலும் இருந்து வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டுக்கு மற்றொரு நெருக்கடியாக இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, பலூச் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இப்போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பலூச் போராளிகள் காணாமல் போவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆகவே, தங்களுக்கு எதிராக அரசே தீவிரவாத அமைப்பு போல செயல்படுவதாக பலூச் மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் மேற்கண்ட நடவடிக்கையைக் கண்டித்து பலுசிஸ்தானின் தேரா காஜிகான் நகரில் ஏராளமான பலூச் மக்கள் திரண்டு மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பலூச் ஒற்றுமைக் குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பலரும் தங்களது கைகளில் காணாமல் போன தங்களது குடும்பத்தைச் சேர்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பலூச் யாக்ஜேட்டி கவுன்சில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது தேரா காஜிகானில் போலீஸார் தடியடி நடத்தியதாகவும், 2 பெண்கள் உட்பட 20 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்தில் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் போராட்டக் குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அக்கவுன்சில் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “தேரா காஜிகானில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இப்போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கில் போலீஸார் நகரின் 4 வழிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று தெரிவித்திருக்கிறது.
இதனிடையே, தேரா காஜிகானில் டிசம்பர் 19-ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், எனவே யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என போலீஸார் எச்சரித்திருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், பலூச் மக்களை கொல்வதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அரச பயங்கரவாதம் தொடருவதை அனுமதிக்க முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர்.