கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதாக இருந்த கூட்டம் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனவே, பிரதமரின் பயணமும் தள்ளிப்போகிறது.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடுவழக்கும் மசோதா கடந்த 27 வருடங்களாக நிறைவேற்ற முடியாமல் இருந்து வந்தது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது.
இதற்காக, பாரதப் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், கேரள மாநில பா.ஜ.க. சார்பில் ‘ஸ்திரீ சக்தி மோடிக் ஒப்பம்’ என்கிற பெயரில் 2 பெண்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
இம்மாநாடு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தெக்கிங்காடு மைதானத்தில் வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இம்மாநாட்டில் அங்கன்வாடி ஆசிரியர்கள், ஆஷா பணியாளர்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், தொழில் முனைவோர் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்களும் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த ‘ஸ்திரீ சக்தி மோடிக் ஒப்பம்’ என்கிற மாநாடு திடீரென ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து கேரள மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்திரன் கூறுகையில், “மாநாட்டை ஜனவரி 2-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது பிரதமர் மோடியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஜனவரி 3-ம் தேதிக்கு மாநாடு ஒத்தவைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.