திருச்செந்தூர் வெள்ளத்தில் சிக்கிய 400 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடியில் திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளம் நிறைந்து காணப்பட்டது. வெள்ளநீரில், கார், பைக் என எல்லாமே மூழ்கியது. மக்கள் உடைமைகளை இழந்து உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்ட்டனர்.
இதனிடையே, புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யப் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். அப்போது, அவர்களும் பெருமழை, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கிய 400 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும், திருச்செந்தூர் கோவிலில் தங்க வைக்கப்பட்டு, குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.