விசாரணைக்காக இன்று ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2-வது முறையாக ஆஜராகாமல் புறக்கணித்திருக்கிறார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது. ஆனால், இது தொடர்பாக தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, டெல்லி துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், இவ்விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய அமலாக்கத் துறை, நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
ஆனால், இது சட்டவிரோதமான விசாரணை எனக் கூறி, அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் புறக்கணித்தார். இதையடுத்து, டிசம்பர் 21-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. எனினும், கெஜ்ரிவால் இன்றும் ஆஜராகவில்லை.
ஏற்கெனவே தான் திட்டமிட்டபடி 10 நாள் விபாசனா தியானப் பயிற்சிக்கு சென்று விட்டார். ஆனால், தியானப் பயிற்சிக்காக எங்கு சென்றார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. எனினும், கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலம் சென்றதாகவும், அங்கு அவருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் வரவேற்பு அளித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதேசமயம், அமலாக்கத் துறை சம்மன் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருவதாகவும், சட்ட ரீதியாக பதில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அக்கட்சி கூறியிருக்கிறது. இதனிடையே, புதிய சம்மன் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்ட விரோதமானது.
எனது வாழ்க்கை வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையாக இருக்கிறது. மறைக்க எதுவும் இல்லை. எந்த ஒரு சம்மனையும் சட்டபூர்வமாக சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.