சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.
சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 54 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனையடுத்து புதிய முதலமைச்சராக பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தேவ் சாய் பதவி ஏற்றுக்கொண்டார். மாநில பாஜக தலைவர் அருண் சாவோ, எம்எல்ஏ விஜய் சர்மா ஆகியோர் துணை முதல்வராகப் பதவியேற்றனர்.
இந்நிலையில், இன்று புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரு பெண் எம்எல்ஏ உட்பட 9 எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
எட்டு முறை எம்எல்ஏவாக இருந்த பிரிஜ்மோகன் அகர்வால், முன்னாள் அமைச்சர்கள் ராம்விச்சார் நேதம், கேதார் காஷ்யப் மற்றும் தயாள்தாஸ் பாகேல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் , பூபேஷ் பாகேல், சபாநாயகர் ராமன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.