சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீதா விழா நடைபெற்றது.இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது, நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், பகவத் கீதையின் மறுமலர்ச்சிக்காக பல ஞானிகளும், மகாத்மாக்களும் உழைத்துள்ளதாக தெரிவித்தார். சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பகவத் கீதையில் உள்ளன, அதன் செய்தி நாடு மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நான் உலகெங்கிலும் உள்ள பல அறிஞர்களை சந்தித்துள்ளேன், உலகம் முழுவதும் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் கீதையின் தீர்வுகள் உள்ளதாக அனைவரும் நம்புவதாகவும் அமித் ஷா கூறினார்.
நாங்கள் இங்கே குருக்ஷேத்திரத்தின் புண்ணிய பூமியில் அமர்ந்திருக்கிறோம். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையின் செய்தியை கொடுத்தார். பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய சில அறிவுஜீவிகள், கீதையின் செய்தியை வெற்றிகரமாக எல்லா இடங்களிலும் பரப்ப முடிந்தால், உலகில் ஒருபோதும் போர் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
நான் பல ஏற்ற தாழ்வுகளை பார்த்திருக்கிறேன், ஆனால் என் தாயார் எனக்கு சிறுவயதில் கீதை கற்றுக் கொடுத்ததால், நான் எந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் அனுபவித்ததில்லை,” என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
நாட்டின் கலாச்சாரம் எப்போதும் முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பாஜக தனது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டது, மேலும் அதை வழிகாட்டும் சக்தியாக வைத்து அரசு கொள்கைகளை வகுத்தது என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம், இப்பகுதியை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்க முடிந்தது என்று அமைச்சர் அமித் ஷா கூறினார்.
நாட்டில் ஒரு கலாச்சார மற்றும் மத மறுமலர்ச்சி தொடங்குவதற்கு, ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் மற்றும் ‘முத்தலாக்’ முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் கூறினார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் லோக்சபா அறையில், தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ நிறுவப்பட்டதாகவும், இது மோடியின் பதவிக்காலத்தின் உயரிய புள்ளிகளில் ஒன்றாகும் என்று அமித் ஷா குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், யோகா குரு ராம்தேவ், சுவாமி ஞானானந்த் மகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.