கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உத்தரவை நீக்கும் சித்தராமையாவின் முடிவுக்கு கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உத்தரவைத் திரும்பப் பெறுவதாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா நேற்று அறிவித்துள்ளார். இதற்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக உள்ளதாகவும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் என யாரும் சித்தராமையாவிடம் கேட்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒரே சீருடை தேவை என கூறிய அவர், இதனை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். எனவே இந்த உத்தரவை முதலமைச்சர் சித்தராமையாக உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றும் எடியூரப்பா கூறினார்.