கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ‘ஹிஜாப்’அணிய விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படும் என தெரிவித்த முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு காரணமாக அரசு யோசித்து வருவதாக கூறியுள்ளார்.
கர்நாடகா மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி நிறுவனங்களில் உள்ள ஹிஜாப் தடை உத்தரவைத் திரும்பப் பெறுவதாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதற்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா இந்து அமைப்பினர், மடாதிபதிகள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கல்வி நிறுவனங்களில் மத உடையை அனுமதிப்பதன் மூலம், சித்தராமையா அரசு, இளம் மனங்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதை ஊக்குவித்து, கற்றல் சூழலுக்கு இடையூறாக உள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக மைசூரில் சித்தராமையா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ‘ஹிஜாப்’ அணிய விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறுவதற்கு அரசு யோசித்து வருகிறது என்று தான் கூறினேன் என தெரிவித்தார்.
இதை எப்போது செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து, அதற்கு பின் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் சித்தராமையா கூறினார்.