சென்னை அடுத்துள்ளது தாழம்பூர். இந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சங்கிலியால் கை, கால்கள் கட்டபட்ட நிலையில் ஒரு உடல் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது.
இது தொடர்பாக தகவல் அறிந்து, விசாரணை நடத்திய போலீசார், கொலை செய்யப்பட்டவர் நாவலூர் மப்பேடு பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் 25 வயதான நந்தினி என தெரிய வந்தது.
இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்திய போலீசார், நந்தினியை கொலை செய்தது அவரது முன்னாள் காதலர் வெற்றி என கண்டுபிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், வெற்றியும், நந்தினியும் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். ஆனால், வெற்றி திருநங்கை என்பது நந்தினிக்கு தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்து அவரை விட்டு விலகியுள்ளார். மேலும், வெற்றியை விட்டுவிட்டு வேறு ஒருவரை காதலித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றி, நந்தினியை பலமுறை எச்சரித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் வெற்றி நந்தினியை கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில், நந்தினியின் பிறந்த நாள் அன்று, வெற்றி அவரை கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று உணவு வழங்கியுள்ளார்கள்.
பிறந்த நாளில் சர்ப்ரைஸ் தருவதாக கூறி, தாழம்பூர் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று, நந்தினியின் கை, கால்களை சங்கிலியால் கட்டி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். நந்தினியின் அலறல் சத்தத்தை தடுக்க பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.