இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் பயிற்சி போட்டியில் இருந்து திடீரென லண்டனுக்கு சென்றுள்ளார், இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்பாரா ? இல்லையா ? என்பது குறித்து பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20, ODI, டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய மூன்று தொடரில் இந்திய அணி விளையாடிவருகிறது.
அதில் டி20 மற்றும் ஒரு நாள் தொடர் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.
இதற்கான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிரிடோரியாவில் உள்ள மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான 3 நாட்கள் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி ஆட்டத்தில் இருந்து விலகி திடீரென லண்டனுக்கு புறப்பட்டார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. முதலில் குடும்பத்தில் ஏதேனும் எமர்ஜென்சி ஏற்பட்டிருக்கலாம், அதனால்தான் அவர் சென்றிருக்கிறார் என்று தகவல் வெளியானது.
ஆனால் அவர் மும்பைக்கும் வரவில்லை. இந்த நிலையில் தான் இது குறித்து பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ள தகவலில் விராட் கோலி லண்டனுக்கு சென்றதாகவும் இது குறித்து ஏற்கனவே பிசிசிஐ இடம் அவர் அறிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்திய அணியுடன் விராட் கோலி 4 பயிற்சி முகாமில் பங்கேற்று விட்டதாகவும் அதன் பிறகு தான் அவர் லண்டனுக்கு சென்றதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தற்போது முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்து விட்டதாகவும் அவர் திட்டமிட்டபடி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி நினைத்திருந்தால் அவர் லண்டனுக்கு சென்று மூன்று நாட்களுக்கு முன்பே தென்னாப்பிரிக்கா வந்திருக்கலாம் என்றும் ஆனால் அவர் பயிற்சி செய்து விட்டு தான் லண்டன் சென்றதாகவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.