எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், 2019 தேர்தலில் பெற்றதை விட 10 சதவிகித வாக்குகள் கூடுதலாகப் பெற வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தலைவர்கள் உறுதியாக உள்ளனர். மேலும், நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 3 பெரிய மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதால் தலைவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.
எனவே, சூட்டோடு சூடாக நிர்வாகிகளை தயார்ப்படுத்தும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தொடங்கி விட்டனர். இதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடந்தது.
இக்கூட்டத்தில் முதல்நாள் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கிக் கூறியிருக்கிறார். அதேபோல, 2-வது நாள் கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா, தேர்தல் தொடர்பான வியூகங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதனால், டெல்லியில் 2 நாட்கள் நடந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும், கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. 6 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக வாக்குகளைப் பெற்றது. இதன் மூலம், பா.ஜ.க.வின் மொத்த வாக்கு 37 சதவீதமாக இருந்தது. மேலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் பெற்றது.
ஆகவே, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்றது முதல் 50 சதவீத வாக்கு வங்கியை வசப்படுத்துவதை இலக்காகக் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறை வாக்கு சதவீதத்தை மேலும் 10 சதவீதம் அதிகரிக்க பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியும் கூட்டத்தில் இதையே வலியுறுத்தி பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக வெளியாகி இருக்கும் தகவலில், “2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றதைவிட 2024-ம் ஆண்டு தேர்தலில் 10 சதவீதம் கூடுதலாக வாக்குகளைப் பெற வேண்டும். இதற்காக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்களை கட்சியினர் சந்தித்துப் பேச வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் ‘வளா்ந்த இந்தியாவுக்கான உறுதியேற்பு யாத்திரை’ மூலம் முடிந்த அளவுக்கு அதிக மக்களை கட்சியினர் அணுக வேண்டும். மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் நலத்திட்ட உதவிகள், வளா்ச்சித் திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும். குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் நிர்வாகிகள் கவனம் செலுத்தாமல், கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் செயல்பாடு எதிர்கட்சிகளை திகைப்படையச் செய்வதாக இருக்க வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக சவால் விடுவதற்கு எதிர்கட்சிகள் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்கட்சியினர் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள். தவறான தகவல்களைப் பரப்புவார்கள். இதை நம்பி மக்கள் ஏமாற அனுமதிக்கக் கூடாது. பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என்ற உறுதியான நம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்க வேண்டும். இதற்காக வாக்குச் சாவடி அளவிலான களப் பணிகளை வலுப்படுத்த வேண்டும்.
கட்சியின் தொண்டர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு அதிக அளவிலான மக்களைச் சந்தித்து ஆட்சியின் சிறப்புகளை எடுத்துச் சொல்ல வேண்டும். சமீபத்தில் 3 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பெற்ற வெற்றி, கட்சியினருக்கு உற்சாகத்தையும், மக்கள் மத்தியில் பா.ஜ.க. குறித்த நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் அதிகரித்துள்ளது. இவை நாடாளுமன்றத் தோ்தலில் நமக்கு சாதகமான விஷயங்கள்.
மேலும், ஜனவரி மாதம் நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை போன்றவை தேர்தலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பேசியதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.