குஜராத் மாநிலம் துவாரகாவில் 37,000 பெண்கள் பங்கேற்ற “மஹா ராஸ்” கோலாகலமாக நடைபெற்றது. ஏ.சி.சி. சிமென்ட் நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பெண்கள் உண்ணாவிரதம் மற்றும் மௌன விரதம் இருந்து பங்கேற்றனர்.
குஜராத் மாநிலம் துவாரகா நகரில், இந்துக்களின் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோவில் அமைந்திருக்கிறது. இங்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மருமகளின் நினைவாக “மஹா ராஸ்” திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு மஹா ராஸ் திருவிழா துவாரகாவில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை பாரதிய அஹிரானி மஹாராஸ் சங்கதன், அகில் பாரதிய யாதவ் சமாஜ் மற்றும் அஹிரானி மஹிலா மண்டல் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.
நந்த் தாம் எனும் இந்தியாவின் முன்னணி சிமென்ட் நிறுவனமான ஏ.சி.சி. சிமென்ட் நிறுவன வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திருவிழாவில், ஆஹிர் இனத்தைச் சேர்ந்த 37,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து பங்கேற்றனர்.
இப்பெண்களில் பெரும்பாலோனோர் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இத்திருவிழாவைக் காண சுமார் 1.5 லட்சம் அஹிர் யாதவ் இன மக்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.
இந்த “மஹா ராஸ்” நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் பக்தியுடன் உண்ணாவிரதமும், மௌன விரதமும் இருந்து கலந்து கொண்டனர். மஹா ராஸ் விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் இந்துக்களின் புனித நூலான “ஸ்ரீ பகவத் கீதை” பரிசளிக்கப்பட்டது. விழாவில் குஜராத் மாநிலம் ஜம்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் பூனம்பென் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.