விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் வறட்சி ஏற்பட வேண்டும் என விரும்புவதாக கர்நாடக அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பெலகாவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக வேளாண் துறை அமைச்சர் சிவானந்த் பாட்டீல் பங்கேற்று பேசினார்.
அப்போது, விவசாயிகளுக்கு கிருஷ்ணா நதி நீர், மின்சாரம், விதை உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவதால், மீண்டும் மீண்டும் வறட்சி ஏற்பட வேண்டும் என விவசாயிகள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை வறட்சி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா, கடந்த காலங்களில் விவசாயிகள் தற்கொலை குறித்து பாட்டீல் பேசிய சர்ச்சை கருத்துக்களை நினைவுகூர்ந்தார். சிவானந்த் பாட்டீல் மீண்டும் விவசாயிகளை அவமதித்துள்ளார். அவரை உடனடியாக அழைத்து முதலமைச்சர் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், அவர் தன்னை திருத்திக்கொள்ள முடியவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என விஜயேந்திரா தெரிவித்தார்.
நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிரான காங்கிரஸ் அரசாங்கத்தின் இந்த அணுகுமுறை துரதிர்ஷ்டவசமானது என்றும், பாஜக வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.