பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணப்படவில்லை என்றால், காஸாவுக்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மிரட்டல் விடுத்திருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பாகிஸ்தான் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதும், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும், பேச்சுவார்த்தை நடத்துவதுபோல பாசங்கு செய்து பாகிஸ்தான் முதுகில் குத்தி வருகிறது.
இந்த நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி.யும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா தனது அண்டை நாடான பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்தினால்தான், இரு நாடுகளும் வளர்ச்சியடைய முடியும்.
இந்தியாவால் தனது நண்பர்களை மாற்றிக் கொள்ள இயலும். ஆனால், அண்டை நாடுகளை மாற்றிக் கொள்ள இயலாது என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்ப்பாய் கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும்கூட போர் என்பது தீர்வல்ல எனவும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் கூறியிருக்கிறார்.
இந்த சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றியடைய அதிக வாய்ப்பு உள்ளது. அவர், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண விரும்புகிறார். இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் காஸா மற்றும் பாலஸ்தீனத்தின் நிலையே இந்தியாவிற்கும் ஏற்படும்” என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ஹினா ஷபி பட் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வருத்தமளிக்கிறது. பரூக் அப்துல்லா இப்போதே கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சி பாகிஸ்தானுக்கு முன்னால் தலைகுனியப் போவதில்லை. நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சித்தோம். ஆனால், அவர்கள் மீண்டும் மீண்டும் எங்களை முதுகில் குத்தியுள்ளனர்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.