பிரதமர் மோடி தலைமையில் 3-வது தேசிய தலைமை செயலாளர்கள் மாநாடு நாளை டெல்லியில் தொடங்குகிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பங்கேற்பு நிர்வாகத்தையும் கூட்டாண்மையையும் ஊக்குவிக்கும் வகையில், தலைமைச் செயலர்களின் தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாடு நாளை முதல் 3 நாட்களுக்கு டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில், மத்திய அரசின் பிரதிநிதிகள்,தலைமைச் செயலாளர்கள் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் அடங்கிய 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
விநியோக வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கான சிறந்த வாழ்க்கைத் தரத்தை அடைவதற்கான கூட்டு நடவடிக்கைக்கு இது அடித்தளம் அமைக்கும்.
இந்த மாநாட்டில் நலத்திட்டங்களை எளிதில் அணுகுதல், சேவை வழங்குவதில் தரம் ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து,நிலம் மற்றும் சொத்து, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், பள்ளிப்படிப்பு ஆகிய ஐந்து துணைக் கருப்பொருள்கள் விவாதிக்கப்படும்.
இவை தவிர சைபர் பாதுகாப்பு,வளர்ந்து வரும் சவால்கள்,செயற்கை நுண்ணறிவு பற்றிய கண்ணோட்டம்,ஆகியவற்றிலும் சிறப்பு அமர்வுகள் நடைபெறும்.
ஒவ்வொரு கருப்பொருளின் கீழும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறந்த நடைமுறைகளும் மாநாட்டில் முன்வைக்கப்படும். முதலாவது மாநாடு ஜூன் 2022 இல் தர்மசாலாவிலும், இரண்டாவது மாநாடு கடந்த ஆண்டு ஜனவரியில் டெல்லியிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.