தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் அலகுகள் தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், 5 நாள் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யா சென்றார். 29-ம் தேதி வரை ரஷ்யாவில் இருக்கும் ஜெய்சங்கர், ரஷ்ய பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்றும், இப்பயணத்தின்போது ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மாஸ்கோ சென்ற ஜெய்சங்கர், ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்து உரையாடினார். அப்போது, அணுசக்தி மற்றும் மருந்துகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
மேலும், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஆகவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் மின் உற்பத்தி அலகுகள் அமைப்பது தொடர்பான சில முக்கியமான ஒப்பந்தங்களிலும் இந்தியாவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டிருக்கின்றன.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஜெய்சங்கர் மற்றும் ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் ஆகியோருக்கு இடையே விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெய்சங்கர், “இன்று எனது முன்னிலையிலும், துணை பிரதமர் மந்துரோவ் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் திட்டத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்” என்று கூறியிருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க்ததில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மந்துரோவுடனான சந்திப்பில் வர்த்தகம், நிதி, இணைப்பு, எரிசக்தி, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் அணுசக்தி களங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
புதிய வாய்ப்புகளை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்துவது பாராட்டப்பட்டது. பல்வேறு பரிமாணங்களில் எங்களது ஒத்துழைப்பை மிகவும் சீரானதாகவும் நிலையானதாகவும் ஆக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் தூத்துக்குடியில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம், ரஷ்ய தொழில்நுட்ப உதவியுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. அணுமின் நிலையத்தின் முதல் மின் அலகு 1,000 மெகாவாட் வடிவமைப்பு திறனுடன் பிப்ரவரி 2016-ல் செயல்படத் தொடங்கியது.
தொடர்ந்து,1,000 மெகாவாட் திறனுடன் 2-வது அலகு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், 4 அலுகுகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் 2027-ம் நிறைவடையும் என்றும், அதன் பிறகு கூடங்குளம் அனுமின் நிலையத்தில் 6,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அணுசக்தித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.