இந்தியாவில் ஜனவரி 1 முதல் சிம் கார்டு விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதனைப் பின்பற்றாதவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வந்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பல தீவிரவாத செயல்களும் நடைபெற்று வருகிறது.
இதனைத் தடுப்பதற்காக இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது சிம் கார்டுகளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான விதிகளை மாற்ற அரசு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிம் கார்டு வாங்கும் செயல்முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் புதிய விதிமுறைகள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்ற தகவல் வந்துள்ளது.
அதேபோல் மத்திய அரசின் புதிய தொலைத்தொடர்பு மசோதாவின்படி, போலி சிம் கார்டுகளை வாங்கும் நபர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறியப்பட்டுள்ளது.
அதேபோல் புதிய விதிமுறையின் படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்த பயோமெட்ரிக் தரவுகளை வாங்குவது மூலம் மோசடி செய்யும் நபரை எளிதில் கண்டுபிடிக்க உதவும்.
ஜனவரி 1 முதல், அங்கீகரிக்கப்படாத சிம் கார்டு பரிவர்த்தனைகளின் அபாயத்தைக் குறைப்பதற்காக டிஜிட்டல் நோ யுவர் கஸ்டமர் (KYC) செயல்முறைகள் மூலம் சிம் கார்டுகள் விற்கப்படும்.
புதிய விதிமுறைகளின் படி சிம் கார்டுகள் மொத்த விநியோகம் இனி வரும் ஆண்டில் அனுமதிக்கப்படாது. வணிக நோக்கத்தில் சிம் கார்டு பெறுபவர்களுக்கு மட்டுமே மொத்தமாக விநியோகிக்கப்படும்.
மேலும் தொலைத்தொடர்பு உரிமையாளர்கள், பாயின்ட் ஆஃப் சேல் ஏஜெண்டுகள் மற்றும் சிம் விநியோகஸ்தர்கள் மொத்த விநியோகத்திற்கு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய தொலைத்தொடர்பு விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம், விதிகளை மீறும் டீலர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.