ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு சொத்து விவகாரங்களை மறைத்தது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை முதல் முறையாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவின் பெயரை பயன்படுத்தி இருக்கிறது.
ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும், வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்காமல் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இதையறிந்த சஞ்சய் பண்டாரி, கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டனுக்குத் தப்பியோடி விட்டார். இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி இந்திய அரசு அழுத்தம் கொடுத்து வந்தது. இதைத் தொடர்ந்து, சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் வழங்கியது.
இந்த நிலையில், இவ்வழக்கில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இதில்தான் தலைமறைவான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியிடம் பணிபுரிந்த சி.சி. தம்பி, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவின் நெருங்கிய உதவியாளர் என்று குறிப்பிட்டிருக்கிறது.
இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர் சி.சி.தம்பி, பிரிட்டனைச் சேர்ந்த சுமித் சத்தா ஆகியோருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிசி தம்பி கடந்த 2020-ல் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார்.
அதேசமயம், ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி, லண்டனில் உள்ள சொத்துகள் உள்பட வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வருவாயை மறைத்திருக்கிறார். இவ்வழக்கில் தொடர்புடைய இச்சொத்துகளை மறைக்க சிசி தம்பி மற்றும் சுமித் சத்தா ஆகியோர் உதவி செய்திருக்கிறார்கள்.
மேலும், சிசி தம்பி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் நெருங்கிய கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வதேரா, லண்டனில் உள்ள 12 பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள சொத்தை சுமித் சத்தா மூலம் புதுப்பித்ததோடு மட்டுமல்லாமல், அதே இடத்தில் தங்கியிருந்தார்.
தவிர, ராபர்ட் வதேராவும், சிசி தம்பியும் இணைந்து டெல்லிக்கு அருகேயுள்ள ஃபரிதாபாத்தில் ஒரு பெரிய நிலத்தை வாங்கி, ஒருவருக்கொருவர் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த வழக்கில் முதல் முறையாக வதேராவின் பெயா் சோ்க்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இது தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வதேராவிடம் விசாரணை நடத்தியபோது, அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், “குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சிசி தம்பி மற்றும் சத்தாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத சத்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது” என்றனர்.