ரஷ்யா சென்றிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று மாலை அந்நாட்டு பிரதமர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேசுகிறார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யாவுக்குச் சென்றார். மாஸ்கோவில் அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்துப் பேசினார். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து, ஜெய்சங்கர் இன்று மாலை ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து பேசுகிறார். இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை மாஸ்கோவில் ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்து பேசுகிறார்.
அப்போது, போக்குவரத்து, வங்கி மற்றும் நிதிச் சங்கிலிகள், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, உக்ரைன், ஆப்கானிஸ்தான் நிலைமை மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த உறவு வலிமையிலிருந்து வலிமைக்கு மட்டுமே வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் கூட, ஆசியாவில் ரஷ்யா அதிகம் கவனம் செலுத்துவதை நான் காண்கிறேன். இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் எங்களது வர்த்தகம் மிகவும் வளர்ச்சியடைந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியதற்காக இந்திய சமூகத்தை பாராட்டிய ஜெய்சங்கர், சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை கடந்த 75 ஆண்டுகளின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
தவிர, நமது சிவில் சமூகங்களுக்கிடையே நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவதில் ரஷ்யாவின் பங்கு விலைமதிப்பற்றது. ஆத்மநிர்பர் பாரதம் ரஷ்யாவுடன் உறவுகளை ஆழப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார். எனினும், அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.