2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை இந்த வருடம் இந்தியாவில் முடிவடைந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பையில் 20 அணிகள் பங்குபெறவுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது.
இதனால் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 தொடரிலாவது இந்தியா வெற்றி பெற்று ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெறாது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், ” இம்முறை எனக்கு வித்தியாசமான கருத்து இருக்கிறது. குறிப்பாக இம்முறை தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்லும் என்று நான் கருதுகிறேன்.
அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஐசிசி தொடரை வென்றதில்லை. இருப்பினும் கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் அவர்கள் வெற்றியை நோக்கிச் சிறப்பாக வந்தனர். அதேபோல பாகிஸ்தான் அணியும் அந்த உலகக்கோப்பையில் மிகவும் ஆபத்தானவர்களாகச் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது ” என்று கூறினார்.