பாகிஸ்தான் தீவிரவாதிகள், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி, ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி வருவது அம்பலமாகி இருக்கிறது. இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் உதவி செய்வது உறுதியாகி இருக்கிறது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நமது இராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும், இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே கடந்த திங்கள்கிழமை பூஞ்ச் மாவட்டத்துக்குச் சென்றார். சுரன்கோட், ரஜெளரி மாவட்டம் தானாமண்டி வனப் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, இராணுவ கமாண்டர்களிடம் இராணுவ நடவடிக்கைகளை மிகுந்த தொழில் நோ்த்தியுடன் மேற்கொள்ளுமாறு கமாண்டர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், எந்தவொரு சூழலிலும் உறுதியுடன் இருக்குமாறும் ஊக்கமளித்தார்.
இந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது அம்பலமாகி இருக்கிறது.
இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆடைகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இராணுவ வீரர்களை தாக்குகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, பாகிஸ்தான் இராணுவத்துக்கு சீனாவிலிருந்து ட்ரோன்கள், கையெறி குண்டுகள், இதர ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவை பாகிஸ்தானிலிருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்றன.
இதை தாக்குதல்களின்போது அவர்களால் பயன்படுத்தும்போது கைப்பற்றப்படுகின்றன. இதன் மூலம், பாகிஸ்தான் இராணுவத்துக்கு வரும் ஆயுதங்கள் தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்கப்படுவது உறுதியாகி இருப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் மாதம், ஜம்மு எல்லையில் நமது இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இந்த துப்பாக்கிகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த ஆண்டு நடத்தப்பட்ட 3 தாக்குதல்களிலும், சீனாவின் ஆயுதங்களையே பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
கல்வான் தாக்குதலுக்கு நாம் கொடுத்த பதிலடியால் விரக்தியடைந்த சீனா, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை துாண்டிவிட்டு, லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் நமது இராணுவ வீரர்களை, காஷ்மீருக்கு அனுப்பி திசை திருப்புவதற்காக, இதுபோன்ற உதவிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தானுக்கான தனி தகவல் பாதுகாப்பு ஆய்வகத்தை அமைக்க, சீனா நிதியுதவியும் அளித்து வருகிறது. எனினும், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு முனைகளிலும், பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் நமது பாதுகாப்பு படை தகுந்த பதிலடியை கொடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.