மத்தியப் பிரதேசத்தில் டிப்பர் லாரி மோதி பேருந்து தீப்பிடித்ததில் 13 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து சுமார் 30 பயணிகளுடன் ஆரோன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதேபோல, ஆரோனில் இருந்து குணா பகுதியை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இவை இரண்டும் குணா-ஆரோன் சாலையில் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.
மோதிய வேகத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்து வெளியில் குதித்து தப்பிக்க முயன்றனர். எனினும், தீ மளமளவென வேகமாகப் பரவியதாலும், விபத்தில் பஸ் சேதமடைந்து இருந்ததாலும் பயணிகளால் தப்பிக்க முடியவில்லை.
தகவலறிந்து போலீஸாரும், தீயணைப்பு மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். எனினும், அதற்குள்ளாக பேருந்துக்குள்ளேயே 13 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, காயமடைந்த 17 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
மேலும், இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இச்சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. விபத்து குறித்து கேள்விப்ப்பட்டதும் உடனடியாக கலெக்டர் மற்றும் எஸ்.பி.யை தொடர்பு கொண்டு நிவாரணம் மற்றும் மீட்புப் பணியை தொடங்க உத்தரவிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
















