அயோத்தியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதற்கும், புதிய அமிர்த பாரத் இரயில்கள் மற்றும் வந்தே பாரத் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (டிசம்பர் 30) அயோத்திக்கு செல்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மேலும், இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, அயோத்தி நகரில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், அயோத்தியில் புதிதாக விமான நிலையம் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்ட இரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இவற்றை பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி நாளை அயோத்திக்கு வருகை தருகிறார். மேலும், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுகிறார். அப்போது அவர், மாநிலத்தின் 15,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் 11,100 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும், உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுடன் தொடர்புடைய சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும்.
மேலும், இப்பயணத்தின்போது பிரதமர் மோடி, இராமர் கோவில் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிடுகிறார். இராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு, பக்தர்கள் வசதிக்காக முதல் 100 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட இரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.