தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுமார் 6.10 மணியளவில் காலமானார். இதனைத்தொடர்ந்து அவரது உடல் சாலிக்கிராம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டது. அப்போது அங்கு கட்டுங்கடங்காத கூட்டம் காணப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை விஜயகாந்தின் உடல் சென்னை தீவித்திடலுக்கு எடுத்துசெல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஆளுநர் ரவி நேற்று விடுத்துள்ள பதிவில், சிறந்த நடிகரும், அர்ப்பணிப்பு மிக்க தலைவரும், சிறந்த மனிதநேய வாதியுமான விஜயகாந்தின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி! என தெரிவித்துள்ளார்.