மேற்கு நியூ பிரிட்டனில் உலவுன் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவிகளை விரைவாக அனுப்பிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் நன்றி தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவை மிகப்பெரிய பூகம்பம் உலுக்கி எடுத்தது. அப்போது, அந்நாட்டுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா அரசு அனுப்பு வைத்தது.
அதேபோல, 2019-ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அப்போது, பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அப்போதும், அந்நாட்டுக்கு இந்தியா உதவியது.
இந்த நிலையில், பப்புவா நியூ கினியாவின் உலவுன் மலையில் உள்ள ஒரு பெரிய எரிமலை கடந்த நவம்பர் 20-ம் தேதியன்று வெடித்தது. இதில், 26,000-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டன.
இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, 1 மில்லியன் டாலர் மதிப்பிலான சுமார் 11 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களையும், 6 டன் மருத்துவ உதவிகளையும் அனுப்பி வைத்தது. இந்த நிவாரண உதவியை இந்திய உயர் ஆணையரின் முதன்மைச் செயலாளர் ரவீந்திர நாத், பப்புவா நியூ கினியா அரசிடம் ஒப்படைத்தார்.
இந்த பேரிடர் நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், தூங்கும் பாய்கள், சுகாதாரக் கருவிகள், உணவுகள் மற்றும் தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் ஆகியவை அடங்கும். அதேசமயம், மருத்துவ உதவியில் அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள் மற்றும் சானிட்டரி பேட்கள் அடங்கும்.
இந்த நிலையில், இந்தியா அனுப்பி இருக்கும் மனிதாபிமான உதவிக்கு பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப், பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஜேம்ஸ் மராப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எனது உதவிக்கான கோரிக்கையை பெற்ற குறுகிய காலத்திற்குள், தாராளமாக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி.
இது மேற்கு நியூ பிரிட்டனில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது, மேலும், நட்பு மற்றும் கூட்டாண்மையின் உணர்வுகளை எதிரொலிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா சென்றார். அப்போது, அவரை விமான நிலையத்தில் வரவேற்ற பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராப், மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது.