பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
பாகிஸ்தான் 2024 தேசியத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளதாக அவரது கட்சியின் ஊடகக் குழு இன்று தெரிவித்துள்ளது.
71 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், 2022 ஏப்ரலில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து, அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களில் சிக்கியுள்ளார். 2018 முதல் 2022 வரை பதவியில் இருக்கும் போது அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் பாகிஸ்தான் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரது வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசியத் தேர்தலில் போட்டியிட கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அவரது ஊடக குழு தெரிவித்துள்ளது.
லாகூரில் இருந்து நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலில், கானின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் அவர் அந்தத் தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் அல்ல என்பதாலும், அவர் “நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்” என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.