உலகப்புகழ் பெற்றது திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாது பாரதத்தில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
அவ்வாறு திருப்பதி செல்லும் பக்தர்கள், கீழ் திருப்பதியில் இருந்து பலர் மலைக்கு அலிபிரி வழியாக நடைந்து செல்வது வழக்கம். அவ்வாறு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்கள் சிலரை சிறுத்தை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 5 வயது சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கியது. அடுத்து, ஆகஸ்ட் 11 -ம் தேதி சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழந்தார். இதனையடுத்து, வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து காட்டுக்குள் கொண்டு போய்விட்டனர்.
இந்த நிலையில், திருப்பதியில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் பதிவாகியுள்ளது.
இதனால், அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் கூட்டமாகவும், கையில் தடி ஆகியவை எடுத்து செல்ல வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான திருக்கோவில் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.