ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் புத்ததாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. பெருநகரங்களில் மட்டுமின்றி சிறிய கிராமங்களிலும் நள்ளிரவில் பொதுமக்கள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சி, கால சந்தி தீபாராதனையாகி தொடர்ந்து பூஜை நடைபெற்றது.
புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே வரிசையில் காத்திருந்து, கோயில் நடை திறந்தவுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தான கோவில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், வடபழனி முருகன் கோவில், பழனி முருகன் உள்ளிட்ட கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புத்தாண்டை வளமாக்க வேண்டி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.