தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதீத கன கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், மாவட்டத்தில் உள்ள கருங்குளம், கோரம்பள்ளம் கண்மாய், கடம்பக்குளம், தூதுகுழி மேலக்குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
குளங்கள், கண்மாய்களை திமுக அரசு முறையாக தூர்வாராததால், கரைகள் உடைந்து மக்கள் வெள்ளத்தில் சிக்கியதாக புகார் எழுந்தது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தை சூழ்ந்த மழை வெள்ளம் வடக்கு திரேஸ்புரம், விவேகானந்தர் நகர், கரைவலை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை சூழ்ந்தது. இதனால், அந்த பகுதியே வெள்ளத்தில் தத்தளித்தது. லட்சக்கணக்கான மதிப்பிலான மீன்பிடி வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால், அங்கிருந்த 93 மீனவ குடும்பத்தினர் தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள, தங்களது வீடுகளை விட்டுவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
வெள்ளம் கடலில் கலப்பதற்கான எந்த ஒரு ஏற்பாடுகளையும் திமுக அரசு முறையாகவும், உடனடியாகவும் செய்யாததால், மீனவர்களே வாய்க்காலை வெட்டி கடலுக்குள் வெள்ளம் வடிந்து செல்ல வழி வகை செய்தனர்.
இதனிடையே, கடல் நீர் உவர்ப்பு சுவையில் இருந்து நல்ல தண்ணீராக மாறியுள்ளது. இதனால், மீன்களின் வருகை குறைந்துள்ளது. இதனால், கடந்த 14 நாட்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வருவதாகவும், வருமானம் இன்றி தவித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.