ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சாா்பில் ‘எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டா் சாட்டிலைட்) என்னும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,இது 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொடக்கம் என தெரிவித்துள்ளார். விண்வெளித் துறைக்கு ஒரு அற்புதமான செய்தி என்றும், இது விண்வெளி துறையில் இந்தியாவின் திறமையை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் என்றும் மோடி கூறியுள்ளார்.
செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டின் முதல் நாளில் பிரபஞ்சத்தை ஒளிரச் செய்துள்ளீர்கள், உங்கள் வலிமை எங்கள் பெருமை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள் என அவர் கூறியுள்ளார்.