ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியுள்ள நிலையில், அங்கு உள்ள இந்திய தூதரகம், அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்து உதவி எண்களை வழங்கி உள்ளது.
ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
அப்பகுதியில் உள்ள மக்களை உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமா நகர் பகுதியில் 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி விளைவுகள் குறித்து அறிந்து கொள்ள அவசர கட்டுப்பாட்டு அறையை ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அமைத்துள்ளது. ஜப்பானில் அவசர உதவிகள் பெற ஐந்து அவசர உதவி எண்களையும், இரண்டு மின்னஞ்சல் முகவரிகளையும் இந்திய தூதரக அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.
ஜப்பானின் முக்கிய தீவான ஹொன்ஷூ பகுதியில், உள்ளூர் நேரப்படி மாலை 4:06 மணிக்கு, 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதைத் தொடங்கி, அடுத்தடுத்து தொடர்ச்சியான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மாலை 4:10 மணிக்கு 7.6 ரிக்டர் அளவிலும், 4:18 மணிக்கு 6.1 ரிக்டர் அளவிலும், 4:23 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலும், 4:29 மணிக்கு 4.6 ரிக்டர் அளவிலும், 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4:32 மணிக்கு 6.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில், 9.0 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எழுந்த சுனாமியால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜப்பான் சந்தித்த பெரிய இழப்பு ஆகும்.