நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தைப் பற்றி பிரதமர் மோடி புகழ்ந்து தள்ளிய நிலையில், ஸ்டாலின் முகத்தில் ஈயாடவில்லை. இறுகிய முகத்துடனேயே காணப்பட்டார்.
ஏன் தெரியுமா?
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்த வகையில், காலையில் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிரதமர், பிற்பகலில் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தையும் திறந்து வைத்தார்.
பிரதமர் கலந்துகொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டனர். அந்த வகையில், திருச்சி விமான நிலைய புதிய முனையும் திறப்பு விழாவில் ஸ்டாலினுடன், தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “விஜயகாந்தை நாம் இழந்திருக்கிறோம். விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன்தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்.
திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தினார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று புகழ்ந்து தள்ளினார்.
பிரதமர் மோடி, இப்படி விஜயகாந்தை புகழ்ந்ததும் ஸ்டாலின் முகத்தில் ஈயாடவில்லை. இறுகிய முகத்துடன் காணப்பட்டார். ஸ்டாலின் மட்டுமல்ல, அவருடன் வந்திருந்த அமைச்சர்களும் படு அப்செட். காரணம், விஜயகாந்துக்கு தி.மு.க. தலைமை செய்த கெடுதல்கள் அவ்வளவு.
இதில் முதலாவதாக, சென்னை கோயம்பேடு பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக ஆண்டாள் அழகர் என்கிற பெயரில் திருமண மண்டபத்தை விஜயகாந்த் கட்டியிருந்தார். இந்த சூழலில், கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க. என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.
பின்னர், 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் எதிர்த்து தனியாக நின்றார். இத்தேர்தலில் 8.4 சதவீத வாக்குகள் விஜயகாந்த் கட்சி பெற்றது. இதனால், அரண்டுபோன அப்போதைய தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி, மேம்பாலம் கட்ட இடம் வேண்டும் என்று கூறி, கடந்த 2007-ம் ஆண்டு விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடித்துத் தள்ளியது. இதன் காரணமாக, 1 ஏக்கர் நிலத்தில் மிஞ்சியது வெறும் 20 சென்ட்தான்.
இதன் பிறகும் தி.மு.க. தலைமை சும்மா இருக்கவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலின்போது காமெடி நடிகர் வடிவேலு உள்ளிட்டோரை ஏவிவிட்டு, விஜயகாந்தை மிகவும் தரக்குறைவாக விமர்சிக்க வைத்தனர். மேலும், விஜயகாந்துக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது, கேலியும், கிண்டலும் செய்தனர். அப்படிப்பட்ட நிலையில், பிரதமர் மோடி விஜயகாந்தை புகழ்ந்ததை ஸ்டாலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுதான் அவரது இறுக்கத்துக்குக் காரணமாகும்.