தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்தியர்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் ஆகியோரை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. அதேபோல, இந்தியாவும் பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
அதேசமயம், தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள குடிமக்கள், மீனவர்கள் குறித்த பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1-ம் தேதியும், ஜூலை மாதம் 1-ம் தேதியும் இரு நாடுகளும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2008-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இரு நாடுகளும் தங்களது சிறைகளில் இருக்கும் குடிமக்கள் மற்றும் மீனவர்கள் குறித்த பட்டியலை பரிமாறிக் கொண்டு வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானியர்கள் என்று நம்பப்படும் 81 மீனவா்கள் உட்பட 418 பேர் குறித்த தகவலை பாகிஸ்தானுக்கு இந்தியா பகிர்ந்திருக்கிறது.
அதேபோல, இந்தியர்கள் என்று நம்பப்படும் 184 மீனவர்கள் உட்பட 231 போ் குறித்த தகவலை இந்தியாவிடம் பாகிஸ்தான் அளித்திருக்கிறது. இந்த நிலையில்தான், தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “பாகிஸ்தான் நாடு அளித்த பட்டியலின்படி, 184 இந்திய மீனவா்கள் தண்டனைக் காலம் நிறைவடைந்தும் இன்னும் அந்நாட்டுச் சிறையில் இருந்து வருகிறார்கள்.
ஆகவே, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் தொடர் முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 2,639 இந்திய மீனவர்கள், 67 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, கடந்த ஆண்டில் மட்டும் 478 இந்திய மீனவர்கள், 9 இந்தியர்கள் நாடு திரும்பி இருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.