டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டு, வீட்டுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஆகவே, கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்கிற தகவலால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. இதில், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கியதில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டெல்லி முன்னாள் துணை முதல்வரும், கலால்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இந்த மதுபானக் கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
ஆனால், அந்த சம்மன் அரசியல் உள்நோக்கத்துடன் அனுப்பப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், அமலாக்கத்துறையிடம் அஜராகவில்லை. எனவே, அவருக்கு 2-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும், யோகா பயிற்சிக்குச் செல்வதாகக் கூறி ஆஜராகவில்லை.
இதன் தொடர்ச்சியாக, கெஜ்ரிவாலுக்கு 3-வது முறையாக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெஜ்ரிவால் ஆஜராகாமல் புறக்கணத்தார்.
இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அப்பதிவில், “அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு வெளியே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும், வீட்டுக்குச் செல்லும் சாலைகளையும் தடுப்புகள் வைத்து அடைத்திருக்கின்றனர்.
அதோடு, அவரது அலுவலக பணியாளர்கள் உட்பட யாரையும் போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி வருகிறது.
இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.