மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் வாய்ந்தது. இந்த ஜல்லிக்கட்டை பார்க்க உள்ளூர், வெளி மாநிலம் மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டுக்காக முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக காளைகள் மற்றும் வீரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
இந்நிலையில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு, அவனியாபுரத்தில் 15ம் தேதியும், பாலமேட்டில் 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17 ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.