மதுரையில் வரும் 6-ம் தேதி சக்தி சங்கமம் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து சக்தி சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான கனிமொழி, வரவேற்புக் குழு தலைவி கிருஷ்னவேணி ஆகியோர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “பாரதத்தைப் பொறுத்தவரை பெண்கள் பக்தியிலும், ஞானத்திலும், வீரத்திலும், குடும்பத்தை நிர்வாகிப்பதிலும் எப்போதுமே சிறந்து விளங்கி வருகிறார்கள்.
நமது பாரத நாட்டில் மட்டுமே பெண்களின் கண்ணியமும், மரியாதையும், மாண்பும் எப்பொழுதும் போற்றப்பட்டு வருகிறது. இப்படி பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் கட்டமைப்பை உருவாக்குவதில் பெண்களின் பங்கு இன்றியமையாதது.
பாரத தேசம் முழுவதும் இதுவரை 220 சக்தி சங்கமம் மகளிர் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இவற்றில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் பல பகுதிகளில் நடந்த மாநாடுகளில் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வரும் நிலையில், மகளிரின் ஒருங்கிணைந்த சக்தியை சமூகத்தில் நிலைநாட்டுதல் மிகவும் அவசியம் என்ற எண்ணத்தில் மதுரையில் சக்தி சங்கமம் என்ற பெயரில் மகளிர் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மதுரை கேசவ சேவா கேந்திரம் சார்பில், ராஜா முத்தையா மன்றத்தில் வரும் 6-ம் தேதி பெண்களுக்கு பெண்களால் பெண்களின் மாநாடாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகள், காலை 9 மணியளவில் பாரதிய பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் தொடங்குகின்றன.
தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பூஜனீய யதீஷ்வரி கதாதப்பிரியா அம்பா ஆசியுரை வழங்குகிறார். பகவத் கீதை சொற்பொழிவாளர் யமுனா வாசினி தேவிதாசி தலைமையுரை ஆற்றுகிறார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மதியம் 12:30 மணியளவில் இன்றைய சூழலில் பெண்கள் துறை ரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதில், பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மஹாலக்ஷ்மி, விவேகானந்த கேந்திரத்தின் சாஹித்யா சேவா ப்ரமுக் டாக்டர் கீதா ரவி மற்றும் மத்திய அரசின் தேசிய மாற்றுத் திறனாளி துறை ஆலோசகர் காமாக்ஷி ஸ்வாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மதியம் 2:30 மணியளவில் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விளக்கவுரை ஆற்றுகிறார். தென் தமிழக மகளிர் ஒருங்கினைப்பாளர் வழக்கறிஞர் கனிமொழி சிறப்புரை ஆற்றுகிறார்.
சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். இந்த சக்தி சங்கமம் நிகழ்ச்சியில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகரைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.