ஜக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறும் இந்திய புலம்பெயர்ந்த மக்கள் நடத்தும் பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இந்திய புலம்பெயர்ந்தோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கின்றனர். அங்கு 33 லட்சம் இந்திய புலம் பெயர்ந்த மக்கள் குடியேறியுள்ளனர். இந்நிலையில் இந்திய புலம்பெயர்ந்த மக்கள் பங்கேற்கும் கூட்டம் அடுத்த மாதம் 13ஆம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.
கடந்த ஆண்டுகளில், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருகிறார். அவர் குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
2014 ஆம் ஆண்டு முதல், பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஆறு முறை விஜயம் செய்துள்ளார். கடந்த டிசம்பரில் காலநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்காக பிரதமர் மோடி துபாய் சென்றார். இந்த வருகை இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்தியா-யுஏஇ வர்த்தகம் புதிய உயரங்களை எட்டியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவில் கணிசமான முதலீட்டு பங்குதாரராக உருவெடுத்துள்ளது.