அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் முஸ்லீம் மனுதாரருக்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 7000 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ராமர் பாதைக்கு அருகில் உள்ள கோட்டியா பன்ஜிடோலாவில் உள்ள அவரது வீட்டில் அவருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் இராமர் கோவில் அமைவது மகிழ்ச்சி அளிப்பதாக இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இஸ்லாமியர்கள் மதிக்கின்றனர். எங்கும் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடக்கவில்லை.
அயோத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அயோத்தி இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த நல்லிணக்க பூமி என அவர் தெரிவித்தார். பிரதமர் தரிசனத்திற்காக (புனிதப் பயணம்) அயோத்திக்கு வருவது அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறினார்.
கடந்த மாதம் 30ஆம் தேதி விமான நிலைய திறப்பு விழாவுக்காக அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு இக்பால் அன்சாரி மலர் தூவி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.