பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த, காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
மும்பையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, பாரதப் பிரதமரின் பெயரை நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என்பதற்கு பதிலாக நரேந்திர கெளதம் தாஸ் மோடி என்று குறிப்பிட்டார்.
இதில், தாமோதர் தாஸ் என்பது பிரதமர் மோடியின் தந்தை பெயராகும். அப்படி இருக்க, தொழிலதிபர் கெளதம் அதானி பெயரை இணைத்து, பவன் கேரா பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். இதை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், பவன் கேராவுக்கு எதிராக அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த 3 வழக்குகளையும் லக்னெளவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் போலீஸுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒருங்கிணைத்த உச்ச நீதிமன்றம் மாற்றியது.
அதோடு, பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீனும் வழங்கியது. இதனிடையே, பவன் கேரா தனது கருத்துகளுக்காக நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். அத்துடன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, உ.பி. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
ஆனால், அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது. எனவே, பவன் கேரா உச்ச நீதிமன்றத்தை நாடினார். அவரது மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பவன் கேராவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.