சென்னையில் வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி, 2-வது முறையாக தமிழகம் வருவிருப்பது பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி தமிழகத்துக்கு வருகை தந்தார். அப்போது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
மேலும், திருச்சி விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த புதிய முனையத்தையும் திறந்து வைத்தார். அதோடு, 19,850 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி 2-வது முறையாக தமிழகத்துக்கு வருகை தரவிருக்கிறார். அதாவது, சென்னையில் ஜனவரி 19-ம் தேதி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது.
இப்போட்டிகளை தொடங்கி வைக்க வருகை தருமாறு, டெல்லி சென்றிருந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, இப்போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகை தரவிருக்கிறார். தொடர்ந்து, திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையையும் பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும், பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி 2-வது முறையாக தமிழகத்துக்கு வருகை தரவிருப்பது பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் 4 மாதங்களில் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்த சூழலில், பிரதமர் மோடியின் வருகை பா.ஜ.க.வுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்று பா.ஜ.க.வினர் கருதுகின்றனர். ஆகவே, பிரதமரின் வருகை பா.ஜ.க. தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்தது போல அமையும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.