ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்றும் நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் மாநிலம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு, காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனையுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டது. ஆனாலும், போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, காவல்துறைக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளின் விசாரணையின்போது, தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் தரப்பில், எதிர்காலத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும் வகையில், நிபந்தனைகளுடன் கூடிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இதுபோன்ற அணிவகுப்புகள், ஊர்வலங்கள் நடத்தும்போது, பேனர்கள், பதாகைகள் எடுத்துச் செல்வதாக இருந்தால், அதற்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஏதேனும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், வைப்புத் தொகையை திருப்பிப் பெற முடியாது” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.